மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதலால், கோவில் சொத்தை அபகரிக்கக் கூடாது என்ற அச்ச உணர்வு மறைந்து விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், சித்தி கணேசர் நடராஜ பெருமாள், துர்கை அம்மன் கோவில்கள் உள்ளன. கோவிலை பராமரிப்பதற்காக, பக்தர்களிடம் பெறப்பட்ட நன்கொடை வாயிலாக, வளாகத்தில் திருமண மண்டபத்தை, அறங்காவலர்கள் கட்டினர். வாடகை பணத்தை, கோவில் பராமரிப்புக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கோவிலையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க, நிர்வாக அதிகாரியை, 1995ல் அறநிலையத் துறை நியமித்தது. கோவில் சொத்துக்களை, பரம்பரை அறங்காவலர்களும் கவனித்து வந்தனர்.
திருமண மண்டபத்தின் வாயிலாக கிடைத்த வருவாயை, கணக்கில் கொண்டு வரவில்லை; கோவில் வசம் ஒப்படைக்கவில்லை என புகார் வந்ததை அடுத்து, ஆவணங்களை ஒப்படைக்கும்படி, ஜீவானந்தம் என்பவருக்கு, நிர்வாக அதிகாரி கடிதம் அனுப்பினார்; அதற்கு பதில் இல்லை.
இதையடுத்து, கோவில் சொத்துக்களை நிர்வகிக்க உரிமை உள்ளதாகவும், திருமண மண்டபத்தை ஒப்படைக்கவும் உத்தரவிடக் கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில், நிர்வாக அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த சிவில் நீதிமன்றம், கோவில் சார்பில் வழக்கு தொடர நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்றும், நிவாரணம் பெற கோவிலுக்கு உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு அளித்தது.
சிவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஜீவானந்தம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
கோவிலுக்கு தானமாக சொத்துக்களை மக்கள் வழங்கி உள்ளனர். சொத்துக்கள் வாயிலாக பெரிய அளவில் வருவாய் வராததால், நிலங்களில் பயிர் செய்வதற்கு, அறங்காவலர்கள் அனுமதி வழங்கினர். வாடகையை வழங்க தவறினாலும் கூட, அவர்களின் பொருளாதார பின்னணி, கோவிலுக்கு செய்த சேவையை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடும் போக்கு இருந்தது.
பொதுவாக, கோவில் சொத்துக்களை அபகரிக்கக் கூடாது என்ற அச்ச உணர்வு மக்களிடம் இருந்தது. தற்போது, மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல் காரணங்களால், அந்த உணர்வு மறைந்து விட்டது. வீட்டுமனைகளாக, வணிகக் கட்டடங்கள், விவசாய நிலங்கள் என கோவில் சொத்து எதுவாக இருந்தாலும், குற்ற உணர்வே இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அதனால், கோவிலுக்கு வருமானம் வருவது இல்லை.
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை நிர்வாக அதிகாரிக்கு இருக்கும்போது, அதற்காக வழக்கு தொடரும் பொறுப்பும் உள்ளது. எனவே, நிர்வாக அதிகாரி தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது தான்.
சொத்துக்களை மீட்பதற்கு, நிர்வாக அதிகாரிக்கு உரிமை உள்ளது. மேல்முறையீடு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.