காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவு பொதுக்கூட்டம் கொட்டும் பனி மழைக்கிடையே நடைபெற்றது.
நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நடைபயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், டெல்லி என 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம், கடந்த 27ஆம் தேதி காஷ்மீரை எட்டியது. 3 நாட்கள் காஷ்மீரில் பயணத்தை தொடர்ந்த ராகுல் காந்தி நேற்று தனது 3 ஆயிரத்து 750 கிலோமீட்டர் தூர நடை பயணத்தை நிறைவு செய்தார். ஸ்ரீ நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தனது பயணத்தை அவர் நிறைவு செய்தார்.
இதனை அடுத்து ராகுலின் ஒற்றுமை பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கொட்டும் பனி மழையிலும் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் 13 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி., கலந்து கொண்டு பேசினார். இதனை அடுத்து காங்கிரஸ் தோழமை காட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினர். இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, பனி மழை கொட்டியதால் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்காவும் தங்களை மறந்து சிறிது நேரம் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர்.