சென்னை :
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த H.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்து எம்பியானார்.
இதனால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக இருந்தது. இதனிடையே நாங்குநேரி தொகுதியில் போட்டியிட திமுக விரும்பியதாக கூறப்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உதயநிதியும் நாங்குநேரியில் திமுக போட்டியிட வேண்டும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பார்.
ஆனால் நாங்குநேரி தொகுதியை விட்டுத்தர காங்கிரஸ் கட்சி தயாராக வில்லை என்றும் தகவல் வெளியானது. இதனால் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், காலியாக இருந்த நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து உடனடியாக அண்ணா அறிவாலயம் சென்ற தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று கூறி சலசலப்புக்கு முடிவு கட்டினார்.
இந்த நிலையில், நாங்குநேரி தொகுதியில் H.வசந்தகுமாரின் அண்ணனும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான குமரி ஆனந்தன் போட்டியிடலாம் என்ற ஒரு தகவல் வெளியானது.
அதற்கேற்ப, மு.க.ஸ்டாலின் உடனான இன்றைய ஆலோசனை கூட்டத்தில் குமரி ஆனந்தனும் பங்கேற்று இருந்தார். இதனால் அவர்தான் போட்டியிடுகிறார் என்பது போல் ஒரு தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை H.வசந்தகுமாரே மறுத்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், குமரி ஆனந்தன் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மிக குறைவு என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மூத்த உறுப்பினராக மட்டுமே அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருப்பார் என்றும் தெரிவித்தார்.
0 comments