சென்னை :-
இந்த 5 ஆண்டுகளுக்கும் எனது ஆதரவு அதிமுகவுக்கு தான் இருக்கும் என்று எம்.எல்.ஏ கருணாஸ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இனி தேர்தலில் போட்டியிடுவேனா, மாட்டேனா என்பது குறித்து எனக்கு தெரியாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிமுக தான் ஆட்சி செய்ய வேண்டுமென்பதே எனது ஆசை என கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ் முதல்வர் பழினிசாமி குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த சமயத்தில் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்டது.
சிறையில் இருந்து வெளியே வந்த கருணாஸ் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், தேவைப்படும் பட்சத்தில் தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி கூவத்தூர் ரகசியத்தை தெரிவிப்பேன் எனவும் கூறினார். இதனால் கருணாஸீன் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் சபாநாயகர் ஓரு தலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று கூறி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 02ம் தேதி முதல்வரை நேரில் சென்று சந்தித்த கருணாஸ், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அன்றைய தினம் திரும்பபெற்றார். தற்போது ஆளும் அதிமுக அரசுக்கு இந்த 5 வருடங்களுக்கும் தனது ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.
மேலும் இன்றைய தினம் சட்டப்பேரவையில் பேசிய கருணாஸ், இராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலைக்கல்லூரி அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.மணிகண்டன், கல்லூரி தனது தொகுதியான இராமேஸ்வரத்தில் தான் வருகிறது. இராமநாதபுரத்தில் வரவில்லை எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கருணாஸ், எனது தொகுதியில் எதுவும் நடக்கவில்லை என்பதை ஒத்துக்கொண்ட அமைச்சருக்கு மிக நன்றி என நடிகர் கருணாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
0 comments