சென்னை :-
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ம.நீ.ம., கட்சியின் தலைவர் கமலஹாசன் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிரடியாக தெரிவித்தார். அவரது கருத்து பிரதானமாக திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்பதை சார்ந்தே இருந்தது.
இதனால் கமலஹாசன் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்தது. அவரும் அதே கருத்தை தான் ஆமோதித்து வந்தார். கமல் இவ்வாறு திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியிலும் கமலை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியானது.
அதில் பத்மஸ்ரீ பட்டம் பெற்றப்போதும், பாராட்டு விழாவுக்கு கலைஞர் கருணாநிதியை அழைத்த போதும் திமுக ஊழல் கட்சியாக தெரியவில்லையா? மருதநாயகம் படப்பிடிப்பபை துவங்க அன்றைய திமுக முதல்வரை அழைத்த போது ஊழல் தெரியவில்லையா? ஆட்சி அதிகாரத்தில் இருந்தப்போது திமுக ஊழல் கட்சியாக தோன்றாத கமலுக்கு, தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்து 7 வருடங்களுக்கு பிறகு திமுக ஊழல் கட்சியாக தெரிகிறது என்றால் அது அவரது சொந்த கருத்தாக இருக்க முடியுமா? என அக்கட்டுரையில் கேள்வி எழுப்பபட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த திருமணவிழா ஒன்றில் மு.க.ஸ்டாலினும், நடிகர் கமலஹாசனும் கலந்துக்கொண்டனர். அப்போது நிகழ்வில் அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு சகஜமாக பேசிக்கொண்ட காட்சிகள் நேற்று இணையம், தொலைக்காட்சி, நாளேடுகள் என அனைத்து தளத்திலும் வைரலாகின.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் ம.நீ.ம., கட்சியும் இணையவுள்ளதாக சில தகவல்கள் அரசியல் களத்தில் வெளியாகி உள்ளன. அதில்,
தனது தலைமை ஏற்று வேறுகட்சிகள் கூட்டணியில் இணைய வேண்டும் என கமல் நினைக்கிறார், ஆனால் அது சட்டப்பேரவை தேர்தலுக்கு தான் பொருந்தும், நாடாளுமன்ற தேர்தலில் நாம் அமைக்கும் கூட்டணியில் கமல் இணையவேண்டும் என ராகுல் காந்தி விரும்புவதாகவும், இது தொடர்பாக ராகுல் காந்தி மு.க.ஸ்டாலினிடம் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ராகுலின் இந்த முடிவு குறித்து கமலிடம் காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், அப்போது இராமநாதபுரம், தென் சென்னை, கடலூர் ஆகிய 3 தொகுதிகளை தனது கட்சிக்கு ஒதுக்கவேண்டும் என கமல் தரப்பில் கேட்கப்பட்டதாகவும், ஆனால் 3 தொகுதிகள் என்பதை கேட்ட காங்கிரஸ், கமலுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இராமநாதபுரம் என்ற ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும், அதனை கமல் ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் பேசப்படுகிறது.
முதலில் இராமநாதபுரம் தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் வேறு தொகுதியை கேட்கும் படி திமுக தரப்பில் கூறப்பட்டதாகவும், ஆனால் கமல் அதனை ஏற்க மறுத்தாகவும், இறுதியில் ராகுல் காந்தி தலையிட்டு இராமநாதபுரம் தொகுதி கமலுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளது.
கமலின் இந்த முடிவுக்கு மக்கள் நீதி மய்யத்தில் உள்ள சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், ஆனால் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் நாம் போட்டியிடுகிறோம். திமுகவுடன் நேரடி கூட்டணி அமைக்கவில்லை என்று கமல் விளக்கம் அளித்திருப்பதாகவும் தகவல்கள் உள்ளது.
0 comments