பிரேசில்:-
உலகின் மிகப்பெரிய காடாகவும்,உலகத்தின் நுரையீரல் என்று செல்லமாக அழைக்கப்படும் அமேசான் மழை காடுகளில் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
கடந்த 9 மாதத்தில் மட்டும் அங்கு மொத்தமாக 78000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதில் 75% காட்டுத் தீ இன்னும் அணையவில்லை.
இந்த காட்டு தீக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்தியாவிலிருந்தும் இந்த காட்டு தீக்கு எதிராக பல்வேறு குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர்,டைட்டானிக் படத்தின் ஹீரோ லியனார்டோ டி காப்ரியோவும் இந்த அமேசான் காட்டு தீ குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட காப்ரியோ மிக முக்கியமான காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக காப்ரியோ வேர்ல்டு வைல்ட்லைப் பண்ட் என்று தொண்டு அமைப்பிற்கு இந்திய மதிப்பில் 35,87,8750 ரூபாய் கொடுத்தார்.
இந்த நிலையில் அந்த நிறுவனம் இதற்கு கைமாறாக நேரடியாக அமேசானில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரிடம் கொடுத்தது. இந்த படங்கள் அங்கு இருக்கும் சமூக நலப்பணியாளர்கள் மூலம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அமேசான் காட்டை கொளுத்திவிட்டதே டைட்டானிக் படத்தின் ஹீரோ லியனார்டோ டி காப்ரியோதான் என்று பிரேசில் அதிபர் ஜாய்ர் போல்சோனாரோ பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
காப்ரியோ வேர்ல்டு வைல்ட்லைப் பண்ட் நிறுவனத்திற்கு பணம் கொடுத்து காட்டை கொளுத்திவிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கு புகழ் தேடிக்கொள்கிறார், எல்லாம் நடிப்பு என்று அந்நாட்டின் வலதுசாரி தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆனால் போல்சோனாரோவின் புகாரை காப்ரியோ மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-' மக்களுக்கு எங்களை பற்றி தெரியும். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன். என்னுடைய சமூக பணிகளை அரசியல்வாதிகளால் முடக்க முடியாது. நான் இதற்கு எதிராக போராடுவேன் என்று காப்ரியோ தெரிவித்துள்ளார்.
0 comments