உலக நாடுகளை ஒரு ஆண்டு காலம் உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கி வருவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது. பைசர் பயோண்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விடப்பட்டுள்ளன. அந்நாடுகளில் தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகளின் படி, தியேட்டர்கள், மால்கள் போன்றவை மூடப்பட உள்ளன. பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை மந்திரி மட் ஹன்காக் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் பேசிய மட் ஹான்காக் மேலும் கூறும் போது, “மக்களை பாதுகாப்பாக வைப்பதோடு மட்டும் இல்லாமல் அதிக அளவு பாதிப்புகளையும் நீண்ட கால பிரச்சினைகளையும் குறைக்க முடியும் என்பதால் தற்போது எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை. சில இடங்களில் ஒவ்வொரு ஏழு நாட்களிலும் கொரோனா பாதிப்புகள் இரு மடங்காகி வருகின்றன. கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இதுவும் காரணமாக இருக்கக் கூடும்” என்றார்.
0 comments