திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள தீபமலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.இந்நிலையில் தீபத்திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களை அனுமதிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறும் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை தினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும், பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், வெளியூர்களில் இருந்து பஸ்களை இயக்கினால், லட்சக்கணக்கான பக்தர்கள் மகா தீபத்தன்று திருவண்ணாமலையில் திரண்டுவிடுவார்கள் என்பதால், 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெளியூர் போக்குவரத்தை தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும், அது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறது. அதனடிப்படையில், தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு .

0 comments