அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தனது செல்வாக்கை நிரூபித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முக்கியம் வாய்ந்ததாக அமைய உள்ளது. இதற்காக கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மாதந்தோறும் வருகை புரிந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மேற்குவங்கத்திற்கு சென்ற ஜே.பி நட்டா வருகை தந்துள்ளார். டைமண்ட் ஹார்பர் நகருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜே.பி நட்டாவின் காரை வழிமறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் நட்டாவிற்கு பாதுகாப்பு அளிக்க வந்த காரின் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கார் கண்ணாடிகளும் சேதமடைந்தன.இந்த சம்பவம் பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜே.பி.நட்டா வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு நாடகம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர்கள் நடத்திய பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதால் அதை திசைத்திருப்பவே நாடகமாடுகிறார்கள் எனவும் அவர் விமர்சித்தார்.இந்த நிலையில், மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நட்டாவின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து பதிலளிக்க மேற்கு வங்க டி.ஜி.பி மற்றும் அரசு தலைமை செயலருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
0 comments