செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள செட்டிநாடு குழுமம் அலுவலகங்கள், குடியிருப்புகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளை தொடர்ந்து, அதன் ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதில், செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடியளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் செட்டிநாடு குழுமம் சுமார் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை செட்டிநாடு குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.23 கோடி கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல், வெளிநாட்டு வங்கிகளில் ரூ.110 கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.மருத்துவ மேற்படிப்பிற்கு நன்கொடை பெற்றதை குறிக்கும் வகையிலான சில ரசீதுகளும் சிக்கியுள்ளன. போலி ஆவணங்களை சமர்பித்து ரூ.435 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
0 comments