சென்னை தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு பெருவிழா செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆதிகால கிறிஸ்தவ புனிதரும் மறைசாட்சியுமான புனித செபஸ்தியார் படைவீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாவலராகவும், தொற்று நோய்களிலிருந்து குணமளிப்பவராகவும் போற்றப்படுகிறார். இவரை பாதுகாவலராக கொண்ட ஆலயம் சென்னை தாம்பரத்தை அடுத்த அருள்நகர் இரும்புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் இரண்டாம் ஆண்டு பெருவிழா கடந்த 18 ஆம் தேதி திருகொடியேற்றத்துடன் தொடங்கியது .
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் மேதகு டாக்டர் A. நீதிநாதன் தலைமையில் பங்குத்தந்தை ஜார்ஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை ராஜேஷ் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.இந்த திருப்பலியில் அருள்நகர் பங்கை சேர்ந்த 11 பேருக்கு ஆயர் அவர்கள் உறுதிபூசுதல் வழங்கினார்.
இந்த திருவிழா திருப்பலியில் முன்னாள் இணை பங்குத்தந்தை ரவி ஜோசப் மற்றும் தாம்பரம் மறைவட்ட அருட்ப்பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக நடைபெற்ற திருத்தேர் பவனியில் சென்னை, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பமாக கலந்து கொண்டனர்
இதுவரை தேர்வுநிலை பங்காக இருந்த இந்த ஆலயம் இந்த விழாவில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் மேதகு டாக்டர் A. நீதிநாதன் அவர்களால் பங்காக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் செங்கல்பட்டு மறை மாவட்டத்தில் புனித செபஸ்தியாரை பாதுகாவலராக கொண்ட முதல் பங்கு ஆலயம் என்னும் பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது.