தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3.15 மணிக்கு காலமானார். இவர் பக்கவாதத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
தந்தையின் மறைவு குறித்து அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் அஜித்குமாரின் தம்பி அனில் குமார் இறுதிச் சடங்குகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் விஜய் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு சென்று நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அதற்குள் இறுதி சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டன.இந்த நிலையில் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார். அஜித் வீட்டுக்கு விஜய் காரில் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சினிமாவை தாண்டி அஜித் , விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.