ஆவின் பால்பாக்கெட்டில் ஈ இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.
அரசுத் துறை நிறுவனமான ஆவின் பால் தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு அலகுகளும், நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதற்கும் பிரத்யேக டிப்போக்களும் செயல்பட்டு வருகின்றன. எத்தனை தனியார் பால் நிறுவனங்கள் வந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆவின் பாலையே விரும்பி வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் இன்று காலை ஒரு பெண் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி இருக்கிறார். பின்னர் வீட்டுக்கு வந்து அந்த பால் பாக்கெட்டை கத்திரிக்கும் சமயத்தில் அதில் ஏதோ கறுப்பாக ஒன்று மிதப்பதை அவர் பார்த்திருக்கிறார். பின்னர் நன்றாக அதை உற்றுப் பார்த்த போது அது ‘ஈ’ என்பது தெரியவந்தது.
இதை அவரது வீட்டில் உள்ளவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் . மேலும், இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ‘ஈ’ மிதந்த அந்த பால் பாக்கெட் திரும்பப் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய பால் பாக்கெட் வழங்கப்பட்டது
இந்த வீடியோவை பார்த்த நுகர்வோர் பலர் இதை ஷேர் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். பாக்கெட் பாலுக்குள் ஈ இருந்ததால் அதிர்ச்சியாகும் மக்கள், ஆவினின் மெத்தனப் போக்கைக் கண்டித்து வருகின்றனர் . பால் குடிக்க கவருக்குள் ஈ புகுந்ததா? என்று கேள்வி கேட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.