தீர்மானங்கள் நிராகரிப்பு, சி.வி.சண்முகம் ஆவேசம், ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டில் வீச்சு என பல்வேறு பரபரப்புகளுடன் நடந்து முந்திருக்கிறது அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று காலை நடைபெற்றது. பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை ஆகியவற்றை வைத்திருந்த உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வருவதற்கு முன் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கினார். பின்னர் ஓபிஎஸ் மண்டபத்திற்கு வருகை தந்தபோது, ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எழுப்பினர் . மேலும் மேடையில் இருந்தும் ஓபிஎஸை வெளியேற கோரி கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவுக்கு வந்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். பொதுக்குழு தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், திடீரென அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக மைக் முன்னே 3 முறை கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும் ஒற்றை தலைமையுடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதேபோல் ஒற்றை தலைமை நாயகர் என எடப்பாடி பழனிசாமியை ஜெயக்குமார் புகழ்ந்து பேசினார்.
இதையடுத்து அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய சி.வி. சண்முகம், எம்ஜிஆர் ஜெயலலிதா போல் ஒற்றை தலைமை ஏற்படுத்த வேண்டும் .இரட்டை தலைமையால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. தெளிவான ஒற்றை தலைமை ஏற்படுத்த வேண்டும். இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு, ஒற்றை தலைமை கீழ் உருவாக்குவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என பேசினார். இதை தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மேடையில் பேச முற்பட்டார். அப்போது அவருக்கு அவையில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் மேடையில் முழக்கம் எழுப்பினர். உடனடியாக ஓ பன்னீர்செல்வம் மேடையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அவர் கீழே இறங்கி வரும்போது மீது கூட்டத்திலிருந்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்கள் வீசப்பட்டன
இதையடுத்து மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என பேசினார்.அதிமுகவின் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை பொதுக் குழுவில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் பலரும் பூங்கொத்துகளையும், மலர்மாலைகளையும் அறிவித்து தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளிக் கிரீடமும், வீரவாளும் வழங்கப்பட்டது.
கடுமையான எதிர்பார்ப்புகளுடன் 11.30 மணிக்குத் தொடங்கிய அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சலசலப்பு, கோஷங்கள், எதிர் கோஷங்கள், நிராகரிப்பு, ஆதரவு என சுமார் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றது.