இன்று பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றைத் தலைமையா இரட்டைத் தலைமையா என்ற கேள்வியுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று கூடியது. புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தெம்போடு ஓபிஎஸ் பொதுக்குழுவில் கலந்துகொண்டார். ஆனால் அவர் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்ததில் இருந்தே சூழல் அவருக்கு சாதகமாக இல்லை. இபிஎஸ் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் ஒற்றைத் தலைமை என கோஷம் எழுப்ப, மற்றொரு தரப்பினர் ஓபிஎஸ் துரோகி என கோஷம் எழுப்பினர். ஓபிஎஸ் மட்டுமின்றி அவரது ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனால் அதிருப்தியடைந்த வைத்திலிங்கம் மேடையிலிருந்து கீழிறங்கி அமர்ந்தார். இதனையடுத்து இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் மேடைக்கு ஏறி எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனையடுத்து தீர்மானங்கள் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாக வைகைச்செல்வன் கூறிக்கொண்டிருக்கும்போது, அனைத்துவகை தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகின்றன என சி.வி. சண்முகம் கத்தி கூறியதும் சலசலப்பு ஏற்பட்டது .
மேலும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடக்கும் எனவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் மேடையிலிருந்து வெளியேறினர். அப்போது கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத ஒருவர் ஓபிஎஸை நோக்கி தண்ணீர் பாட்டிலை வீசினார்.
இது மட்டுமின்றி பொதுக்குழு கூட்டம் நடந்த மண்டபத்திற்கு வெளியே நின்ற பன்னீர்செல்வத்தின் கார் டயரும் பஞ்சர் ஆக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.