நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி இருந்தார். படத்திற்கான பாடல்கள் மற்றும் வசனத்தை தமிழில் விவேக் எழுதி இருந்தார். தமன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்தது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
இந்தச் சூழலில் வாரிசு படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இன்று (பிப்.22) வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழியில் இந்தப் படம் தற்போது ஓடிடி-யில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. வரும் மார்ச் 8-ம் தேதி இந்தி மொழியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.