வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனப் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்தது. அதன் தொடர்ச்சியாகத் திருவாய்மொழி திருநாள் எனப்படும் இராப்பத்து விழாவும் நடைபெற்றது. இந்த திருவிழாக்கள் ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிக்குப் பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அங்குச் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.
சுமார் 6 மணிநேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களிடம் சென்று குறைகளைக் கேட்டபடி, வரிசைகளை ஒழுங்குபடுத்தியபடி பணிகளை அமைச்சர் சேகர்பாபு மேற்கொண்டதைப் பார்த்து பொதுமக்களும், பக்தர்களும் வெகுவாக பாராட்டினர்.
நள்ளிரவு 2 மணி வரை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த ஆய்வுப் பணியை முடித்து விட்டே அமைச்சர் சேகர்பாபு வீட்டு சென்று உணவு அருந்தியிருக்கிறார்.