ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலியில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து விழா கடந்த 22ஆம் தேதி நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை 3.30 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு, அதிகாலை 4.48 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கா, ரெங்கா என கோஷமிட்டபடி நம்பெருமாளை தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்று முதல் இராப்பத்து உற்சவம் தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.