பல்வேறுபட்ட மனநோய் வகைகளில் ‘மனச்சிதைவு’ (schizophrenia – ஸ்கிசஃப்ரீனியா) என்ற தீவிரமான நோயைப் பற்றி அறிந்திருப்பவர்கள் சொற்பமே. குடும்பத்தால் கைவிடப்பட்ட மனநோயாளிகளில் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம்.
மனநோய்களைப் பற்றிய புரிதல், விழிப்புணர்வு இல்லாததால், மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்கள், சிந்தனை, பேச்சு, அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். ஆகவே, நோயின் அறிகுறிகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவை: தனக்குத் தானாகப் பேசுவது – சிரிப்பது, சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல்.
எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, ஒழுங்கற்ற நடத்தை, முணுமுணுத்தல், பிரமைகள், மாயத் தோற்றங்கள், அசாதாரண உணர்வுகள், விசித்திரமான நம்பிக்கைகள், சந்தேகங்கள் போன்றவையும் தன்னை யாரோ உளவு பார்க்கிறார்கள், தன்னைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள், தன்னைக் கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள், தன்னை யாரோ எப்போதும் பின்தொடர்கிறார்கள், தனக்கும் தன் குடும்ப நபர்களுக்கும் கெடுதல் செய்ய முயல்கிறார்கள் என்பது போன்ற அச்சமும் இருக்கும்.
மனித மூளையில் ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்குத் தகவல் அனுப்பும் பணியை ‘டோபமைன்’ (Dopamine) என்ற அமிலம் செய்கிறது. ஆனால், இந்த அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போதும், சமநிலையை மீறும்போதும் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்படும். ஒருசிலருக்கு மரபணுரீதியாகவும் இந்நோய் வரலாம். பெரும்பாலும் இவை இரண்டும்தான் நோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்.
மனநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடனேயே உடனடியாக மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், உளவியலர் போன்றவர்களிடம் நோயாளியை அழைத்துச்செல்ல வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், நோயின் அறிகுறிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆனால், பெரும்பாலானோர் கோயில், பூஜை, பேய்விரட்டுதல் என்று காலத்தை விரயமாக்கிவிட்டு, நோயின் அறிகுறிகள் அதிகமான பிறகு மருத்துவரிடம் அழைத்துவருபவர்கள்தான் அதிகம்.
மனச்சிதைவு நோயாளியைப் பராமரிப்பது சவாலான விஷயமே என்றாலும் பராமரிப்பாளர்கள் முதலில் நோயைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு மனச்சிதைவு இருக்கிறது என்பதை மனச்சிதைவு நோயாளி ஏற்றுக்கொள்வதில்லை. மருத்துவரிடம் போக வேண்டும் என்ற எண்ணமும் வராது.
குடும்ப நபர்கள் மாத்திரை கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். நோயாளியுடன் வாக்குவாதங்களில் ஈடுபடவோ அவர்களின் நடத்தையைச் சரிசெய்யவோ முயல்வது கூடாது. இது சரி, இது தவறு என்று புரிந்துகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதால், அது அவர்களை மேலும் கோபமடைய வழிவகுக்கும்.
நோயாளியின் தற்கொலை எண்ணங்களையோ தற்கொலை முயற்சிகளையோ ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. நோயாளி கிளர்ச்சியடையும்போது, கூர்மையான ஆயுதங்களோ ஆபத்தான பொருட்களோ அருகில் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் நோயாளியின் பிரச்சினைகள், நடத்தையைப் பற்றி விவாதிக்கக் கூடாது.