மலையாள சினிமா நடிகை சுபி சுரேஷ் மரணமடைந்தார். அவருக்கு வயது 41. கல்லீரல் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை சுபி சுரேஷ், கடந்த மாதம் இறுதியில் இருந்து ஆலுவா மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையை எடுத்துவந்தார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் அவரின் கல்லீரல் செயலழிந்தது. கல்லீரல் தானத்துக்கு எதிர்பார்த்து இருந்த நிலையில்தான் அவர் உயிரிழந்தார்.
சுபி சுரேஷின் மறைவு மலையாள சினிமா உலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிட்னஸ் நிபுணராகவும் அறியப்பட்டுவந்த சுபி சுரேஷ், தனது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே தன்னை நோய்வாய்ப்படுத்தியது என்று ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். சரியான நேரத்தில் உணவு உண்ணாதது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் வாழ்க்கையை தொலைத்தேன் என சமீபத்தில் கண்ணீர் மல்க அவர் அளித்த பேட்டி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
சுபி சுரேஷ், மலையாள சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மூலமாக மலையாளிகள் மனதில் நகைச்சுவை நடிகையாக குடியேறியவர். கேரளாவில் புகழ்பெற்ற நகைச்சுவை குழுவான கலாபவன் அமைப்பில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் இவர். திலீப், ஜெயராம், கலாபவன் மணி என எண்ணற்ற மலையாள திரைக்கலைஞர்கள் இந்தக் குழுவில் இருந்துதான் சினிமாவுக்குள் நுழைந்தனர்.
ஆண்கள் நிறைந்த அந்தக் குழுவில் தனியொரு பெண்ணாக மேடை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தனது தனித்துவ நகைச்சுவை பாணியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு கொச்சி கலாபவன் குழுவில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மேடை மற்றும் தொலைக்காட்சியில் ஆண் ஆதிக்கம் செலுத்தும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார்.