மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாளையொட்டி நடிகர் கமல் ட்வீட் செய்துள்ளார்.
நாகேஷ் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். 1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.