முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதாவது, தமிழ் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று இயக்குநர் பேரரசு கோரிக்கை வைத்திருக்கிறார்.
சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பேரரசு, தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போக்கு அதிகரிக்கிறது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்தால் நன்றாக ரீச் ஆகும். இயக்குநர்கள் அனைவரும், மக்கள் அனைவருக்கும் சென்றடைவது போன்ற தலைப்புகளை வைக்க வேண்டும். தமிழ் பற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
ஸ்ட்ரைக்கர் படத்தின் இசைவெளியீட்டு விழா என்பதாலும், அந்த படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்ததாலும், தொடர்ந்து இது போன்று ஆங்கிலத்தில் தலைப்புகள் வருவதாலும் பேரரசு இப்படி ஒரு கருத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் பேசிய போது, தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதை மீண்டும் கட்டாயமாக வேண்டும் . முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மிமிக்கிரி கலைஞர் நவீன், கமல்ஹாசன் போல் நன்றாக பேசினார். புரிகிற மாதிரி இவர் பேசி இருக்கிறார் என்றவர், ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பாட்டு எழுதிய பாடலாசிரியர் ஹரிசங்கருக்கு நன்றி என்றார். ஏ .ஆர். ரகுமான் வருகைக்கு பின்னர் பின்னணி பாடகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது ஒரு ஆரோக்கியமான விஷயம் என்றும் குறிப்பிட்டார்.