பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான சதீஷ் கவுசிக் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனை அவரது நண்பரும், திரைத்துறை சகாவுமான அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அனுபம் கேர், ”இரவில் அவர் மிகவும் அசவுகரியமாக உணர்ந்து தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி தனது ஓட்டுநரிடம் தெரிவித்திருக்கிறார். இரவு 1 மணிக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
சதீஷ் கவுசிக்கின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அனுபம் கேர், தனது ட்விட்டர் பக்கத்தில், “மரணம்தான் இறுதியான உண்மை என்பது தெரியும். ஆனால் நான் உயிருடன் இருக்கும் போதே என்னுடைய உயிர்நண்பன் சதீஷ் கவுசிக்கைப் பற்றி இப்படி எழுத வேண்டியது இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 45 வருட கால நட்பில் முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. வாழ்க்கை நீங்கள் இருந்தது போல இனி ஒருபோதும் இருக்கப்போவதில்லை. ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
சதீஷ் கவுசிக், தேசிய நாடகம் மற்றும் திரைப்படம் தொலைக்காட்சி பள்ளியின் முன்னாள் மாணவராவார். “ஜானே பி தோ யாரோன்”, “மிஸ்டர் இந்தியா”, “தீவானா மஸ்தானா”, “உட்டா பஞ்சாப்” போன்ற படங்களில் இவரது கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமாகின. தனது நகைச்சுவைக்காக பெரிதும் அறியப்படும் சதீஷ், படங்களும் இயக்கியுள்ளார். சல்மான் கான் நடித்த “தேரே நாம்” கரீனா கபூர் கான், துஷ்ரா கபூர் நடித்த “முஜ்ஹே குச் ஹேக்னா ஹை” போன்றவை இவர் இயக்கிய பிரபலமான படங்களாகும்.
விரைவில் வெளியாகவிருக்கும் எமர்ஜென்சி திரைப்படத்தில் அவருடன் பணியாற்றியதை நடிகை கங்கனா ரணாவத் நினைவு கூர்ந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “இந்த கொடுமையான செய்தியை கேட்டுதான் எழுந்தேன். அவர் என்னுடைய பெரிய உந்துசக்தி. வெற்றிகரமான நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கிய சதீஷ் கவுசிக், தனிப்பட்டமுறையில் மிகவும் கனிவான உண்மையான மனிதர். எமர்ஜென்சி படத்தில் அவரை இயக்குவதை நான் பெரிதும் விரும்பினேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.